Monday, October 11, 2010

சுருதிலயம் 2010(மழலைகளின் நிகழ்ச்சி - ஒர் மழலைப் பார்வை)


October 09, 2010, சனிக்கிழமை, இனியமாலை, நேரம் 4.30,

இடம்: Walter Baker Sports Centre, Food Court, Ottawa,

Presented by தமிழ்மீடியா,

சிறுவர்களிற்கான சங்கீத நிகழ்ச்சி,


இத்தரவுகளை தாங்கிய வண்ணம் வேகமாக விரைந்து நகர்கிறேன். இறைவன், இயற்கை, இசை இந்த மூன்றும் இவ்வுலகின் இரசனைக்குரியவை. இயற்கை தரும் இசை பிரமிப்பானது. நாம் கருவில் உருவாகிற போதே இசை மீது கவனம் கொள்கிறோம். காதல் செய்கிறோம். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நாம் இசையால் இன்பம் கொள்கிறோம். இயன்றவரை இசையோடுதான் பயணிக்கிறோம்.இசை கருவில் தொடங்கி சுடுகாடுவரை வந்து கொண்டேயிருக்கிறது. தாலாட்டு முதல் பொற்சுண்ணப் பாடல்வரை இசை இனித்துக் கொண்டேயிருக்கிறது. இசை பற்றிய அறிவு உள்ளவர்கள், இசையை இரட்டிப்பாக அனுபவிக்கின்றார்கள். இசையின் நினைவுகள் இதமாக என்மனதை வருட மண்டபத்தை நெருங்குகிறேன்.

மண்டபத்திற்கு வெளியே அல்லது முகப்பில் சுருதிலயம் பற்றிய அறிவிப்புகள் தென்படவில்லை. நுழைவுக்கட்டணமாக $10 டாலர்களை தயார் செய்கிறேன். பிரவேசம் இலவசம் என்கிறார்கள். கலைச் சேவைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டு, $10 டாலர்களை சேமித்த உணர்வோடு உள்ளே நுழைகின்ற போது சுருதிலயம் 2010 பானர், கண்ணைக் கவர்ந்து நிகழ்ச்சிக்கான அகச்சூழலை உருவாக்குகிறது. குத்து விளக்கும் நிறைகுடமும் எங்கள் கலாசாரத்தின் அடையாளமாக அமைந்து குதூகலப்படுத்துகின்றன

அமைப்பாளர்,நிகழ்ச்சி நிரல் பற்றிய அறிவுறுத்தலை வழங்கி ஒவ்வொருவரையும் வரவேற்பது பாரட்டுதலுக்குரிய ஆரம்பமாக அமைகிறது.அமைப்பாளர்களும் உதவியாளர்களும் துரிதமாக இயங்கிக் கொண்டிருக்க, சங்கீத ஆசிரியர்கள் பங்குபற்றுவோரை தயார்நிலையில் வைத்திருக்க,மெல்லெனப் புகுந்த பார்வையாளர்களால் அரங்கு நிறைகிறது.

இனிய நாதஸ்வர இசை மெல்லென தழுவிச் செல்ல, இரு இளநங்கைகள் தொகுத்து வழங்க, பதினைந்து நிமிட தாமத்துடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கின்றது. திறமையும் தகுதியும் வாய்ந்த ஆசிரியர்களிடம் பயின்ற சிறுவர்களின் சாஸ்தீரிய சங்கீதம்(Carnatic Music)செவிவழி புகுந்து, இசையுலகத்திற்குள் இழுத்துச் செல்கின்றது.மிருதங்க மாணவர்கள், ஒருபடி மேலே சென்று திறமையாக வாசிக்கிறார்கள்.நிகழ்ச்சிகள் களை கட்டுகின்றன; தொடர்ந்தும் சோர்வில்லாமல் சிறுவர்கள் அசத்துகிறார்கள்; பரிசுகள் வழங்கி சிறுவர்களை ஊக்குவிக்கிறார்கள்; மழலைகளின் இசையால் மனசு நிறைகிறார்கள் பெற்றோர்கள்; தங்கள் குழந்தைகளையும் இந்த தளத்திற்கு நகர்த்தவேண்டும் என்று எண்ணுகிறார்கள் பங்குபற்றாத மாணவர்களின் பெற்றோர்கள்; பார்வையாளர்கள் ஒவ்வொரு நிகழ்வின் இறுதியிலும் கையொலி எழுப்பி மாணவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்; கன்னி முயற்சி கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது.
பதினைந்து நிமிடம் தாமதமாக நிகழ்ச்சி ஆரம்பித்தமை, வரவேற்புரை வழங்கப்படாமை, பானர் கீழே நழுவி தொங்கிக் கொண்டிருந்தமை, தமிழ் கீர்த்தனைப் பாடல்கள் மிகக்குறைவாக இருந்ததமை. இப்படியாக, நிவர்த்தி செய்யக்கூடிய குறைகள் சில இருந்தாலும் நிகழ்ச்சியை சோர்வோ அல்லது தொய்வோ இல்லாமல் நகர்த்தி சரியான நேரத்திற்கு நிகழ்வை நிறைவு செய்து, மிகச் சிறந்த நிகழ்வு என்பதை நிரூபித்து விட்டார்கள்.

குருவிடம் முறைப்படி கற்று, நிகழ்ச்சியை நல்ல தரமாக வழங்கிய மாணவர்களை முதலில் பாராட்டியாக வேண்டும். ஒட்டாவாவில் சாஸ்தீரிய சங்கீதத்தை (Carnatic Music) வளர்ப்பதற்கு பங்காற்றியிருக்கும் தமிழ் மீடியாவும் அதன் அமைப்பாளர்கள் திரு.திருமதி கண்ணன்(விஜய்) அவர்களும், பாராட்டப்படவேண்டியவர்கள். இசைப் பயிற்சி வழங்கி மாணவர்களை ஒருங்கிணைத்த பெருமதிப்புக்குரிய ஆசிரியர்களான பாலா நரசிம்மன், ஈஸ்வரி சுப்ரமணியம், தர்ஷினி பாஸ்கரன், வித்யா மகாதேவன், விஜயலட்சுமி கணேசன் மற்றும் ஆனந்த நடராஜா சேனாதிராஜா அனைவரும் ஒட்டாவா தமிழ்  சமூகத்தால் மேலும் உள்வாங்கப்பட்டு கௌரவிக்கப்படவேண்டியவர்கள். முக்கியமாக மிருதங்க ஆசிரியர் ஆனந்த நடராஜா அவர்கள் ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் இசைக்கருவிகளை தயார் செய்து விழாவை ஊக்கிவித்தமை பலரது கவனத்தையும் ஈர்ந்தது. இசைவகுப்புகளில் தங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்தி இசைவாணர்களை உருவாக்குகின்ற முயற்சியில் வெற்றிகண்டுகொண்டிருக்கும் முன்மாதிரிப் பெற்றோர்கள்தான் இன்றைய சாதனையாளர்கள். பக்கவாத்தியங்களை "படுபக்காவாகவழங்கியவர்கள்,தொகுப்பாளினிகளான இலக்கியா மற்றும் சிவாஜினி, இந்த நிகழ்ச்சிக்கு ஒத்தாசை நல்கியவர்கள், பார்வையாளர்கள் அனைவரும் பாராட்டுதற்குரியவர்கள்

இந்த நிகழ்வின் ஒரு சமூகக்குறையாக பல பார்வையாளார்களிற்கு (நானும் அடங்கலாக) சாஸ்தீரிய சங்கீதம்(Carnatic Music) பற்றிய அறிவு அல்லது ஈடுபாடு குறைவாக காணப்பட்டது. இது பார்வையாளர்களிற்கும் பங்குபற்றுபவர்களிற்கும் இடையே சிறிய இடைவெளியை உருவாக்கியிருந்தது. இந்த சமூகக்குறை களையப்படவேண்டியது. சாஸ்தீரிய சங்கீதத்தை(Carnatic Music) எல்லா நிகழ்வுகளிலும் புகுத்தி அவைபற்றிய ரசனையுணர்வை ஏற்ப்படுத்த வேண்டிய தார்மீகக் கடமை உள்ளூர் சங்கங்களிற்கும் ஊடகங்களிற்கும் உரியவை

இந்த கலை நிகழ்வின் ஊடாக, நாம் மனதில் மீண்டும் நிலைநிறுத்த வேண்டியவை பற்றி சிறிது பார்ப்போமா


1. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியில் அதிக அக்கறையுடன் கவனம்   செலுத்துகிறார்கள்.[பாராட்டப்படவேண்டியது]

2. பெற்றோர்கள் நிகழ்ச்சி நடத்தியவர்களை கௌரவித்தமை [பாராட்டப்படவேண்டியது]

3. பங்குபற்றியவர்கள் பாராமுகம் இல்லாது, சமநிலையுடன் நடாத்தப்பட்டார்கள் [பாராட்டப்படவேண்டியது]

4. தமிழ் கீர்த்தனையில் அதிக பாடல் இல்லாமல் போனமை [கண்டிக்கப்படவேண்டியது]

5. இரண்டு மணி நேர நிகழ்வில் பதினைந்து நிமிட தாமதம் [கண்டிக்கப்படவேண்டியது]

6. தமிழ் மீடியாவின் கலைசேவை [பாராட்டப்படவேண்டியது]

இதில் சிறுகுறைகள் இருப்பினும், அதிகமான நிறைகளும் உண்டு. எதிர்வரும் காலங்களில் இதைவிட மிகவும் சிறப்பாக செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் எனது பார்வையை நிறுத்திக்கொண்டு உங்கள் பார்வைக்கு விட்டுச் செல்கிறேன்



.பகீரதன்